தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு, படுக்கைகளின் நிலை குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மே.10) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழ்நாட்டில் 14 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கரோனா தொற்று பாதிப்பு குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. 12,000 செயற்கை சுவாசக் கருவிகள் உடனான படுக்கைகள் விரைவில் உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் 5,592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு தற்போது 475 டன் ஆக்ஸிஜன் தேவை உள்ள நிலையில், 419 டன் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் நாள்களில் இதன் தேவை 800 டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட் ஆலை 15ஆம் தேதி முதல் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து உற்பத்தி மையம் தொடங்குவதற்கான ஒப்பந்த புள்ளி கோரலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் அளிக்கும் வரை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து விநியோகத்திற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்ஸிஜனின் தேவை அதிகரிப்பதால் டி.ஆர்.டி.ஓ மூலம் அதன் உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகள் வேண்டும். கரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால், நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். மோசமான நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.