தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம், மருத்துவம் மற்றும் இறப்பு ஆகியத் தேவைகளுக்காக அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, சிறப்பு அனுமதி பெற மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமெனவும், நேரில் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டுமெனவும், அதற்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டியும் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தின் முன் கூடினர். தனி நபர் இடைவெளியின்றி அவர்கள் அங்குக் கூடி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 'பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை'