வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி, விஜய் தாக்கல்செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டுமென வணிகவரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழ்நாடு வணிகவரித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98ஆயிரத்து 075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ஆம் தேதி வணிகவரித் துறை உத்தரவிட்டது.
வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும்
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும், இதே கோரிக்கைகளுடன் அடையாறு கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல்செய்த மனுக்களுடன் நடிகர் விஜய் தாக்கல்செய்த மனு இன்று(மார்ச் 14) நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008ஆம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், வரி செலுத்தக்கோரி 2021ஆம் ஆண்டு, தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீஸை ரத்து செய்யவேண்டுமென வாதிடப்பட்டது.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்த நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு இரண்டு விழுக்காடு எனக் கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தமக்கு 400 விழுக்காடு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நடிகர் விஜய் தாக்கல்செய்த மனுவிற்கு பதிலளித்துள்ள வணிகவரித் துறை, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டுமென தெரிவித்துள்ளது.
பதில் மனு..
மேலும், நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் இரண்டு விழுக்காடு அபராத வட்டியாக 30 லட்சத்து 23ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை வேறொரு நபருக்கு விற்றுவிட்டதாக மனுதாரர் கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களைத் தாக்கல்செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கியபோதும், எந்தப் பதிலும் இல்லாததால் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரசிகர்களுக்கும், ஹேட்டர்களுக்கும் மெசேஜ் சொன்ன அஜித் - நினைவுடுத்திய மேனேஜர்!'