சென்னை: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் ஜெ. குமரகுருபரன் தலைமையில் திருக்கோயில்களின் இணை ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருக்கோயில்களின் வருவாய் இனங்கள் மூலமாக இதுவரை 71 கோடி வசூல் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவேண்டிய நிலுவை வசூல் தொகை உடனடியாக வசூல் செய்து திருக்கோயில்களின் வருவாயைப் பெருக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
2021-22 சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் முக்கியமாக திருக்கோயில்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரியும் சுமார் 1,500 பணியாளர்கள் பணிவரன்முறை செய்வதற்கு உண்டான பணிகளை விரைந்துசெய்ய வேண்டும்.
திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள், உயர் அலுவலர்கள் பதவி உயர்வு தொடர்பான ஆலோசனைகளையும், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் கொண்டுவருவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளவும், மீட்ட இடங்களைச் சுற்றி வேலி அமைத்து எல்லைக்கல் ஊன்றி பாதுகாத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 750 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெறும் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.
பிரசாதம் வழங்குவது தொடர்பான பணிகளில் முன்னேற்றம்
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் உள்பட பத்து திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவது தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆணையர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
திருநீர் தயார் செய்யும் பணிகள் முன்னேற்றம் குறித்தும், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமம் தயாரிக்கும் பணிகளை நன்கு கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
திருக்கோயிலுக்குச் சொந்தமான தங்கத்தேர்கள், வெள்ளித்தேர் பழுது நீக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும்.
அதேபோல் மரத்தேர்களின் நிலையை ஆராய்ந்து அவற்றையும் உடனடியாகப் பழுதுபார்த்து புதுப்பொலிவுடன் வீதி உலா வர தேவையான நடவடிக்கைகளை இணை ஆணையர்கள் மேற்கொள்ள வேண்டும்.
திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்றவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்