சென்னை: அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பசுமைவழிச்சாலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். எனக்கே தெரியல எதுக்காக இந்த ஒற்றைத் தலைமை பிரச்னை வருதுன்னு.
தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது. இந்த இயக்கத்தில் நான் இருப்பதே தொண்டர்களை காப்பாற்றுவதற்காகத்தான்.அதிமுக, தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.
தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது. ஒற்றைத் தலைமை குறித்து பேசியவர்களை கண்டிக்க வேண்டும். கூட்டத்தில் நடந்ததை வெளியே வந்து பேசியது ஏன்?.
இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. பொதுச்செயலாளர் பதவி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. இதுகுறித்து தீர்மானம் போடப்பட்டுள்ளது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அது ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம்.
அடிப்படை உறுப்பினர்கள்தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்தையும் நான் விட்டுக்கொடுத்தது தொண்டர்களுக்காக மட்டுமே. ஆளுங்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி தீவிரம்