சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று (ஜூலை 22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்கு பின்னர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ஓபிஎஸ் பேட்டி:
"அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பொய்யான குற்றச்சாட்டு வைத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையை நடத்தி உள்ளனர். இதன்மூலம் திமுக எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்தால் அது நடக்காது.
முதலமைச்சரிடம் பதில் இல்லை
சட்டப்பூர்வமான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த வருமான வரி சோதனை மிகவும் கண்டனத்துக்கு உரியது. எந்தவித முகாந்திரமும் இல்லாமல், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து வழக்கு நாங்கள் தொடர்வோம்.
நீட் தேர்வு குறித்து பலமுறை கடிதங்கள் மூலமாக பல்வேறு கோரிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால், எதற்கும் பதில் வரவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
ஈபிஎஸ் பேட்டி:
"சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியப்பகுதியில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா பெயர் உள்ள ஒரே காரணத்தினால், அதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் முயற்சியை பொன்முடி செய்து வருகிறார்.
நூலகத்திற்கு மட்டும் நிதி உள்ளதா...?
மதுரை மாநகரில் நூலகம் திறப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஏற்கெனவே தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை வேறொரு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதுதான் தவறு.
நிதி நிலையைக் காரணம் காட்டும் இவர்கள், நூலகம் அமைக்க மட்டும் எப்படி நிதி உள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, "அரசு திட்டமிட்டு வேண்டும் என்றே, ஜெயலலிதா பெயரில் உள்ள காரணத்தினால் அதனை வேறு மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இணைக்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது.
அங்குள்ள பின்தங்கிய மாணவர்களின் நிலையை உயர் கல்வித்துறை அமைச்சர் நினைத்துப் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு... பின்னணி என்ன?