தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரோனா குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு எடுத்துவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறேன். தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனை செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் விமான நிலைய அருகிலேயே தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதேபோல் மாவட்ட வாரியாக புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கவசங்களை அதிகப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். வெளிநாடுகள், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்குச் செய்யப்பட்ட சோதனை குறித்த தகவல்களை அரசு வெளியிட வேண்டும்.
இதேபோன்று காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ராமசாமி பேசும்போது, கரோனா பாதிப்புகள் பரவிவரும் நிலையில் பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வெண்டும் என்று கோரிக்கைவைத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், “கரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டுவருகிறது. சென்னையில் கிண்டி, ராஜிவ்காந்தி மருத்துவமனை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி, என மொத்தம் ஐந்து இடங்களில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்திவருகிறோம். சென்னை தாம்பரம், மதுரை - தொப்பூர், ஈரோடு - பெருந்துறை ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கபட்டுள்ளன.
முதலமைச்சர் 60 கோடி நிதி ஒதுக்கியதன் அடிப்படையில் 25 லட்சம் கூடுதல் முகக்கவசங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உபகரணங்களுக்கான தட்டுப்பாடு இல்லை. இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 62 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாயிரத்து 221 பேர் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இவையே கரோனா நோய் அறிகுறிகள். விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், அண்டை மாநில எல்லைகளில் காவல் துறை உதவியுடன் தடுப்புகள் அமைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கரோனா பாதிப்புகளால் பேரவையை ஒத்திவைக்கும் நிலை இல்லை. பேரவை உறுப்பினர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்புகள் இல்லாத வகையில், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முறையாகச் செய்துவருகிறது“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு