சென்னை விமான நிலைய நிா்வாக அலுவலகத்தில் மின்சார பராமரிப்பு பிரிவு மேலாளா் ஒருவா் இன்று காலை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். உடனடியாக அவருக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினா் பரிசோதனை நடத்தினா். அதில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்சார பராமரிப்பு பிரிவு மேலாளா் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியாா் (மியாட்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலைய நிா்வாக அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தளத்தில் மின்பராமரிப்பு, அக்கவுண்டஸ், சிவில் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. இதற்கிடையே நிா்வாக அலுவலகம் முழுவதையுமே தற்காலிகமாக மூடி, கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்த உள்ளனர். இதையடுத்து சென்னை விமான நிலைய நிா்வாக அலுவலகம் வரும் 8ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ஓட்டுநர் ஒருவா் நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.