சென்னை:சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சட்டவிரோத கடன் செயலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். கடன் செயலி ஒன்றை செல்போனில் டவுன் லோடு செய்து உள்ளார். செயலியை டவுன்லோடு செய்யும்போது, செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலமாக உள்ள விளம்பரங்கள் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார். இந்நிலையில் 2500 ரூபாய் கடன் வாங்குவதற்காக அந்த செயலியில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்தவுடன் பணம் வராமல் இருந்துள்ளது. இதனால் செயலி மூலம் கடன் கிடைக்கவில்லை என்று இருந்த நிலையில், ஒரு வாரம் கழித்து பணத்தை செலுத்துமாறு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வாட்ஸ்அப் கால் மூலம் மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் வாங்கிய 2500 ரூபாய் உடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் செலுத்ததால் மிரட்டுவதாக வடமாநில கும்பல் தெரிவித்துள்ளது. மேலும் பத்து நிமிடத்திற்குள் தாங்கள் அனுப்பும் லிங்கில் பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் மிரட்டியுள்ளது. அந்த லிங்க் மூலம் பணம் செலுத்த முடியாததால் தொடர்ந்து மிரட்டி வந்த வடமாநில கும்பல் 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
உறவினர்களுக்கு ஆபாச படம் அனுப்பிய கும்பல்:இது தொடர்பாக வங்கியில் சென்று விசாரித்த போது தான் பணம் கேட்டு செயலியில் விண்ணப்பித்தது மூன்று நாள் கழித்து கடன் கிடைத்தது தெரியவந்துள்ளது. செயலி மூலம் கடனாகப் பணம் வந்தது தெரியாமல் இருந்ததால், பணத்தை செலுத்தாத தன்னுடைய போட்டோக்களை செல்போன்களில் இருந்து எடுத்து ,தன் தொடர்பு உள்ள எண்களுக்கு , தனது மனைவி உறவினர்கள் குழந்தைகள் ஆகியோர் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி அனுப்பி பணத்தை கட்டுமாறு மீண்டும் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் நண்பர்களுக்கு ஆபாசமாக புகைப்படம் சென்றதால், தனது செல்போன் எண்ணிற்கு அழைத்து விசாரிக்க ஆரம்பித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தெரிவித்துள்ளார். மேலும் மொழிப் பிரச்சினை காரணமாக இந்தியில் மிரட்டுவது தெளிவாக புரியவில்லை என்பதை அறிந்த வடமாநில கும்பல், கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி தமிழில் மொழிபெயர்த்து குறுஞ்செய்தியாக அனுப்பி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
ஆபாசபடம் அனுப்பி மிரட்டல்:தன்னையும் தன் மனைவியையும் உறவினர்களையும் ஆபாசமாக சித்தரித்து நண்பர்களுக்கு புகைப்படம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்பிற்காக தன் குழந்தைகள் வைத்திருந்த செல்போனுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் குழந்தைகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திலும் தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும், புகாரை பெறவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சைபர் புகார்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.