சென்னை: சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்" என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு திட்டம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இலவச நாப்கின், உறுப்பு தானத்திட்டம் என அனைத்து திட்டங்களையும் அறிவித்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான்.
2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என இதே சட்டமன்றத்தில் அறிவித்தார். அதேபோல், 2007-ம் ஆண்டு சென்னையிலுள்ள 65 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இலவச நாப்கின் முதல் முதலில் வழங்கியது திமுக ஆட்சியில்தான், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு திட்டம் கொண்டுவந்ததும் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான்.
உறுப்புகள் தானம் என்பதும் இந்தியாவிலேயே முதல்முறையாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் கொண்டு வந்தார்- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த உறுப்பு தானம் திட்டம் மிக சிறப்பாக இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும். இவை அனைத்தையும் ஆதாரத்துடன், ஆவணங்களுடன் சட்டமன்றத்தில் காட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.