சென்னையில் இருவேறு இடங்களில் மரத்தால பழமையான நாற்காலி, குபேரன் சிலையை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்திலிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 100 ஆண்டுகள் பழமையான நாற்காலியொன்று காணாமல் போனதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், இதேபோல சிவசாமி சாலையில் உள்ள வீடு ஒன்றில் 60 ஆண்டு கால பழமையான குபேரன் சிலையும் திருடப்பட்டது.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான அடையாளங்களின் மூலம் இவ்விரண்டு சம்பவங்களிலும், கைவரிசை காட்டியது ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்பெண்டர் முத்து(40) என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இதனிடையே தலைமறைவான முத்துவை போலீசார் தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் வீடுகள் மற்றும் பழங்கால கோயில்களுக்கு சென்று பழங்கால பொருட்கள் வாங்கி கொள்வதாகக் கூறி, அந்த பொருட்களின் தொன்மை குறித்து கேட்டறிந்து கொள்வார். அதன்பின் அவற்றை திருடிச்சென்று, பர்மா பஜார், புதுப்பேட்டை, மூர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் விற்பார் என்பது தெரியவந்தது.
ஏற்கனவே பழங்கால பொருட்களை திருடியதாக முத்து மீது தேனாம்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும், இரண்டு முறை முத்து கைதாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முத்துவிடம் இருந்து பழங்கால நாற்காலி மற்றும் குபேரன் சிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் தவறான விடைகள்...தேர்வர்கள் அதிர்ச்சி