கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொது போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதையடுத்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுபாடுகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி செப்.7ஆம் தேதி அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதற்கிடையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஊரடங்கு கால சாலை வரியை ரத்து செய்தால்தான் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரையிலான சாலை வரியை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அக்.16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சான்றளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளில், முதல்கட்டமாக இன்று (அக்.16) 500 பேருந்துகள் சேவை தொடங்கின. அதன் பின்னர் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால், வழக்கம்போல் அதிகளவிலான மக்கள் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க: 'சாலையில் இயங்காத பேருந்துகளுக்கு வரி கட்டச் சொல்வது சட்டவிரோதம்' - ஆம்னி பஸ் சங்கம்!