சென்னை: ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 49 கோடி ரூபாய் செலவில் மழை மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மழைநீர் வடிகால்வாயில் முதியவர் ஒருவர் தவறிவிழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறி விழுந்த முதியவர்!
அதன்படி, கால்வாய் அமைக்கப்பட்டு வரும் இடத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த 60 வயது முதியவர், அங்கிருந்து கிளம்ப முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக கால் இடறி கால்வாயில் விழுந்து மூழ்கினார்.
முதியவரின் அலறல் சத்தம் கேட்ட அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். இந்த விபத்தில் முதியவர் நல்வாய்ப்பாக எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
தொடரும் விபத்துகள்
இது போன்ற விபத்துகள் தொடர்வதாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வருவதாலும் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி - திருமாவளவன் வலியுறுத்தல்