சென்னை, திருவான்மியூர் கலாசேத்ரா காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஓய்வுபெற்ற நீதிபதியான பானுமதி வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி, இந்த குடியிருப்புக்கு குடிபோதையில் வந்த ஆறு பேர், அத்துமீறி நுழைந்து காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் நீதிபதி பானுமதியின் வீட்டிற்குச் சென்று கதவை எட்டி உதைத்து தகாத வார்த்தையால் அவரைத் திட்டி உள்ளனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காவலாளி தகவல் அளித்தவுடன் அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து திருவான்மியூர் காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் உள்பட ஆறு பேர் போதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கர்ணன், விஜயராகவன், மோகன்ராஜ், ஏகாம்பரம், குப்பன், மனோகரன் ஆகிய ஆறு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் மீது தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.