கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று(ஜூன் 2) மட்டும் 809 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது நிலவரப்படி அதிகப்பட்சமாக ராயபுரத்தில் 3,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 2,007 பேர், கோடம்பாக்கத்தில் 1,921 பேர், தேனாம்பேட்டையில் 1,871 பேர், அண்ணா நகரில் 1,411 பேர், வளசரவாக்கத்தில் 910 பேர் என 15 மண்டலங்களில் 16 ஆயிரத்து 585 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆணைப்படி, சென்னை குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு இலவச முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாநகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஜூன் 1ஆம் தேதி நிபந்தனைகளோடு கடைகளைத் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் கடைகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றி வருகிறார்களா எனத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆலந்தூரில் முகக்கவசம் அணியாமல், விதிகளை மீறி செயல்பட்ட 42 கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். அடுத்த அறிவிப்பு மாநகராட்சியில் வரும் வரை, இந்த அனைத்துக் கடைகளும் திறக்கப்படாது என அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.