சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்த உசிலம்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், "அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். இன்னும் பலர் என் பக்கம் வர உள்ளார்கள்.
அவர்கள் யார் என்பது பரம ரகசியம். ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையை முழுமையாக படித்த பின்பே அதுகுறித்து கருத்து சொல்ல முடியும். கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரனை நானே நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன்" என்றார்.
வைத்தியலிங்கம் பேசுகையில், "கட்சிக்கு உழைக்கவில்லை என்றால், ஓ.பன்னீர்செல்வத்தை, ஜெயலலிதா எப்படி முதலமைச்சராக்கினார். ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி அரசியலில் அனாதையாகி விடுவார்" என்றார்.
இறுதியாக பேசிய உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், "தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் பின் நின்று, ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் போல் நானும் உதவியாக இருப்பேன். மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவை அகற்ற அதிமுக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ‘திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது’ - ஜெயக்குமார் விமர்சனம்