கரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கத் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணையில் உள்ளது. மனுதாரர் தரப்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாரம் ஒரு முட்டை, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும், அதில் பிரச்னைகள் உள்ளன என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவ மாணவிகளுக்கு முட்டை மற்றும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தனி மனித இடைவெளி பிரச்னை ஏற்படும் என்பதால், முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்படியானால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது தானே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதனைத்தொடர்ந்து, பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அரசு தரப்பில் ஒரு நாள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதால், வழக்கு விசாரணை நாளைக்கு(ஆகஸ்ட் 4) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சந்திரயான்-2 ரோவர் அசைவுகளைக் கண்டறிந்த தமிழ்நாடு டெக்கி!