உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி, உயிர்பலி ஏற்படுத்தியுள்ளதால், முக்கிய வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதேபோல பிற மாநில உயர் நீதிமன்றங்களும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இச்சூழலில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சந்தித்து, அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில், மூத்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுப்பையா, சத்தியநாராயணன், கிருபாகரன், சுந்தரேஷ், சிவஞானம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார்.
’யாரும் என்னைக் கடத்தவில்லை... விருப்பப்பட்டே சென்றேன்’ - இளமதி வாக்குமூலம்
இக்கூட்டத்தில், நாளை முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எனவும், சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிப்பது, உடற்சூட்டை அறிந்துகொள்ளும் கருவியைக் (தெர்மல் ஸ்கேனர்) கொண்டு நீதிமன்றங்களுக்கு வருபவர்களை பரிசோதிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள் கூடும் சங்க அலுவலகங்கள், உணவகங்களை மூடவும், மே மாதத்திற்கு பதில் முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் மூலம் மதுரை சென்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, அங்குள்ள நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
கரோனா அச்சம்: காய்ச்சல் அறிகுறியுடன் சவுதியிலிருந்து வந்த நபருக்கு சிகிச்சை
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் தலைமை நீதிபதி, இதுகுறித்த அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம், வழக்கறிஞர்கள் உணவகம் நாளை மறுநாள் முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.