சென்னை: தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தகுதியானவர்களை தேர்வுசெய்து 17 பாடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2020-21ஆம் ஆண்டு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கணினி பயிற்றுநர் நிலை ஒன்று ஆகிய பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்டது. இந்த எழுத்துத்தேர்வின் முடிவுகள் ஜூலை 4ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
மேலும், இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தமிழ் வழி சான்று பதிவேற்றம் செய்யவும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளது. மேலும், 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 17 பாடங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான தற்காலிகத் தேர்வுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களில் சில பணி நாடுநர்கள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்பிக்காததால், அந்தப் பணிநாடுநர்களின் தேர்வு நிறுத்தி (withheld) வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிகத் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் குறிப்பிட்ட சான்றிதழை செப்டம்பர் 19,20ஆம் தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பிக்கலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தேர்வுத்தேதி மாற்றம் - வென்றால் மாதம் ரூ.1500 ஸ்காலர்ஷிப்!