சோளிங்கர் வட்டாரக் கல்வி அலுவலர் முருகன், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2019-20ஆம் கல்வி ஆண்டில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயின்று பின்னர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வித் தரம் குறித்த நிலையை ஆய்வு செய்ததில் மாணவர்கள் வாசிப்புத் திறனில் பின்தங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செயல் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.
எனவே தங்கள் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக படித்த மாணவர்களுக்கு கல்வி போதித்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களின் வாசிப்புத் திறன் குறைப்பாட்டிற்கான தக்க விளக்கத்தினை அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
![school](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3912609_405_3912609_1563791486794.png)
இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஆய்வு செய்தபோது , தொடக்கக் கல்வித்துறையில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்து விட்டு, ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கூட இல்லாமல் இருக்கின்றனர். ஐந்து ஆண்டுகள் படித்த மாணவர்களுக்கு எந்த எழுத்தறிவும் இல்லாமல் இருப்பது மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதுபோன்று உள்ள மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்" என்றார்.
அரசுப் பள்ளியில் மாணவர்கள் படிக்காததற்கு பல்வேறு காரணங்களை ஆசிரியர்கள் கூறினாலும், அடிப்படை எழுத்தறிவு கூட கற்றுத் தராத பள்ளியில் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு சேர்ப்பார்கள் என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.