சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இதில், மாநிலம் முழுவதிலுமிருந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “உண்மைக்கு மாறான கருத்துகளை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது. திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் போல நானில்லை. ஆனால், 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நம்புகிறேன். தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே லட்சியம்” என்றார்,
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ”சட்டப்பேரவையில் அதிமுகவிற்கு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு அதிமுகவினர் அனைவரும் ஓடி ஓடி உழைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அதிமுகவில் வேட்டி கட்டும் ஆண்கள் இருக்கிறார்களே தவிர, கோஷ்டி சேர்க்கும் ஆண்கள் இல்லை. இங்கு யார், யாருக்கும் அடிமை இல்லை. யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார்.
முன்னதாக பேசிய துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி, “நடைபெறவுள்ள பேரவை தேர்தலில் திமுக அதிமுகவிற்கு மட்டுமே நேரடி போட்டி. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் வெறுமனே சிரித்துக்கொண்டே விளையாடுவர். ஜல்லிக்கட்டு போன்ற தேர்தல் களத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் நேரடிப் போட்டி. வாரிசு அரசியலுக்கு வரும் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுகவில் ஸ்லீப்பர் செல்களே இல்லை. சிலர்(சசிகலா) வெளியே வந்தால் அதிமுக இரண்டாக நான்காக உடையும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் யார் வந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல், பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததற்கு ஒப்புதல் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: கூட்டணி! இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு அதிகாரம்