அண்மையில் அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது அமைப்பு போட்டியிடும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 36 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார்.
மேலும், "வரலாற்றில் மிக முக்கியமான இத்தேர்தல் காலத்தில், எங்களுக்கு என்று ஒரு புதிய கட்சியை உருவாக்க முடியாத சூழலில் உள்ளோம். எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கையில் இளைஞர்களை களத்தில் இறக்குகிறோம். அவர்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். எந்தச் சூழலிலும் மத அரசியலை நாங்கள் நிராகரிக்கிறோம். எங்களுடையது அன்பும், அறனும் நிறைந்த அரசியல்.
தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த 15 வேட்பாளர்கள், என்னுடைய அரசியல் பேரவையிலிருந்து 20 வேட்பாளர்கள் மற்றும் வளமான தமிழகத்திலிருந்து ஒரு வேட்பாளர் என மொத்தம் 36 இளைஞர்களை களமிறக்குகிறோம். இத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை, தளபதிகளை இறக்கி விடுகிறேன். 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றுதான் எங்களது எண்ணம். மிகக் குறைந்த காலம் என்பதால் அது முடியவில்லை.
நாங்கள் போட்டியிடும் 36 தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் மக்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம். அவ்விடங்களில் ஓட்டிற்கு பணம் கொடுக்கும் வேலை அதிகளவில் நடப்பதால், அதனை கண்காணிக்கும் பணிகளை எனது இளைஞர்கள் செய்வார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'சண்டை செய்ய வந்திருக்கிறேன்' - நாமினேஷனில் சீமான் ஆவேசம்