அரவக்குறிச்சி, திருப்பரங்குன்ரம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
இதற்கிடையே, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இறுதி நாளான நேற்று திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன், அதிமுக வேட்பாளர் முனியாண்டி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. பரிசீலனையின்போது தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும், வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ஆம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக இருக்கிறது.
இந்த நான்கு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு வெளியாக இருக்கிறது.