சென்னை: ஸ்ரீபெரும்புதூரில், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கிவரும் நோக்கியா தொழிற்சாலையில் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதன் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
56 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்ததில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கும், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேருக்கும் கரோனா நோய்க் கிருமித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, மே 8ஆம் தேதி பாதி ஊழியர்களைக் கொண்டு நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஆனால் அரசு விதித்த கட்டுப்பாடுகளை நிறுவனம் சரிவர கடைபிடிக்கவில்லை என ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின், தயாரிப்பு பிரிவில் உள்ள 4 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அத்தொழிற்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.