சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கான தேர்தலில் புதிய தலைவராக யார் வந்தாலும், நேரு குடும்பத்தினர் தான் மானசீக தலைவராக இருப்பர்கள் என, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனது வாக்கினை செலுத்திய பின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஜனநாயக முறையில், அடுத்த தலைவர் யார் என்பதை கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும், சசிதரூர் என்னை பொறுத்தவரை திறமையான பேச்சாளர், எழுத்தாற்றல் மிக்கவர், கட்சிக்கு வலிமை சேர்க்க கூடியவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் ஆதரவை பெற்றவர்.
நடுத்தர மக்களை அரவணைத்து செல்பவர் சசிதரூர். காங்கிரஸிற்கு கட்சிக்கு அப்பாற்பட்டவர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் சசிதரூர் தலைவராக வரவேண்டும். என்னுடைய முழு ஆதரவு அவருக்கு தான். அவர் 23 புத்தங்களை எழுதியுள்ளார். நன்றாக படித்து முன்னேறியவர். சசிதரூரின் ஆதரவை குறைத்து மதிப்பீடுகிறார்கள்.
நாளை மறுநாள் (அக். 19) வாக்கு எண்ணிக்கையின் போது, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. புதிய தலைவராக யார் வந்தாலும், நேரு குடும்பத்தில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மானசீக தலைவராக இருப்பார்கள். நேரு குடும்பத்தின் வழிகாட்டுதலின் படிதான் செயல்படுவார்கள்.
காங்கிரஸ் கட்சியினர் மனதில் ராகுல் காந்தி தான் என்றும் மானசீக தலைவராக இருப்பார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. பாரத் ஜோடா யாத்திரையின் பலனை வாக்குகளாக மாற்றுவதும், உதய்பூரில் தீர்மானத்தை செயல்படுத்துவதும், புதிய காங்கிரஸ் தலைவருக்கு சவாலாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் பொன்விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்