சென்னை : தனது அரசியல் குறித்த நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், “இதை கடவுள் தனக்கு கொடுத்த எச்சரிக்கையாக கருதுகிறேன், இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.
திடீர் செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவந்தார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அங்கு சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இதற்கிடையில் இன்று (ஜூலை 12) காலை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது, “மக்கள் மன்றத்தின் வருங்கால திட்டங்கள் மற்றும் தனது வருங்கால அரசியல் பிரவேசம் குறித்து பேசிவிட்டு சட்டென கிளம்பிவிட்டார்.
ஆலோசனை
இதனால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
இதையடுத்து திருமண மண்டபத்தின் பால்கனியில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். தொடர்ந்து ட்விட்டரில் அறிக்கை ஒன்று வெளியானது.
மக்கள் மன்றம் கலைப்பு
அதில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.
அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி பல சார்பு அணிகளை உருவாக்கினோம்.
கதம் கதம்
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை.
ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் ஏதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல் ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம்- ரஜினி பேட்டி!