சென்னை: இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் (ஏப்.15) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் விசாரித்து அனுப்பினர்.
அப்போது கோயம்புத்தூர் மாவட்ட முகவரியில் பழனிசாமி சுப்பிரமணி (54) என்பவரது பெயரில் இலங்கை பயணி ஒருவர் வந்திருந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில் போலி பாஸ்போர்ட் மூலம் வந்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் கண்ணதாசன் சுப்பிரமணி, இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்தார். இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அதன்பின்பு இங்கு உள்ள ஏஜெண்டுகள் சிலரிடம் பணம் கொடுத்து, கோயம்புத்தூர் மாவட்ட முகவரியில் இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இந்தப் போலி பாஸ்போா்ட் மூலம் கண்ணதாசன் சுப்பிரமணி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு போலி பாஸ்போர்ட் வாங்குவதற்கு யார் உதவி செய்தனர்?. போலி பாஸ்போர்ட் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார்? தமிழ்நாட்டில் எங்கு தங்கியிருக்கிறார்? போன்ற விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் சேகரித்தனர். அதன்பிறகு கண்ணதாசன் சுப்பிரமணி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்