சென்னை: நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அமலாக்கத் துறையுடன் இணைந்து 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை மேற்கொண்டது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
இந்த சோதனையானது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்புடைய ஐந்து வழக்குகள் சம்பந்தமாக நடத்தப்பட்டது. விசாரணை மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரவாதத்திற்கு நிதி திரட்டியதும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதும், தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தியதும் தெரியவந்துள்ளது.
ஆயுதப் பயிற்சி கொடுத்து தீவிரவாத கும்பலில் ஆட்கள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது . குறிப்பாக கடந்த ஜூலை நான்காம் தேதி ஹைதராபாத் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் 25 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளுக்கு எதிராக தெலங்கானாவில் தொடரப்பட்ட வழக்கில் பல தகவல்களை திரட்டினர். குறிப்பாக இந்த நிர்வாகிகள் மையங்களை உருவாக்கி வன்முறை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளித்தது மற்றும் இரண்டு பிரிவினருக்கு இடையே மத அடிப்படையில் மோதலை உருவாக்கியது தெரியவந்தது.
பிஎஃப்ஐ தலைவர்கள் மீது வன்முறை தடுப்புச் சட்டம்:அதிகப்படியான குற்ற வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் உறுப்பினர்கள் மீதும் வன்முறை தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி பேராசிரியர் கையை வெட்டியது, கொலை , முக்கிய பிரமுகர்கள் குறிவைத்து தாக்குவதற்காக வெடி பொருட்களை சேகரித்து வைத்தது ,ஐ.எஸ் தீவிரவாதிகளை ஆதரிப்பது பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, பொதுமக்களிடம் தீவிரவாத எண்ணங்களை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
தமிழ்நாட்டில் 11 பேர் கைது:இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், கூர்மையான ஆயுதங்கள், அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் 45 பேரை இந்த வழக்குகளில் கைது செய்துள்ளனர். அதில் 19 பேர் கேரளாவிலும், 11 பேர் தமிழ்நாட்டிலும், ஏழு பேர் கர்நாடகாவிலும் ,நான்கு பேர் ஆந்திராவிலும், இரண்டு பேர் ராஜஸ்தானிலும், ஒருவர் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது 19 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இன்று (செப்-22) நடந்த சோதனை தொடர்பான ஐந்து வழக்குகளில் , டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, முகமது யூசுப், இஸ்மாயில் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று டெல்லியில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் சையது ஐசக், வழக்கறிஞர் காலித் முகமது ,அகமது இட்ரிஸ், முகமது அபுதாஹீர், காஜா மைதீன், யாசர் அராபத், பரகத்துல்லா, பயாஸ் அகமது ஆகிய எட்டு பேர் என மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ தொடர்புடைய 60 இடங்களில் என்ஐஏ சோதனை