சென்னை: சென்னையில் உள்ள நன்மங்கலம் காப்புக்காடு வழியே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க வனத்துறை அனுமதி பெற வேண்டும் எனவும் அதுவரை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடராமல் நிறுத்திவைக்க வேண்டும் எனவும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இரண்டாம் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர்வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நன்மங்கலம் காப்புக்காடு
இந்த வழித்தடம் மாதவரத்தில் தொடங்கி சோழிங்கநல்லூர் சென்றாலும் இடையே உள்ள நன்மங்கலம் வனப்பகுதி பல்வேறு தாவரங்கள், உயிரினங்களின் முக்கிய காப்புக்காடு பகுதியாக உள்ளது. அந்த வனப்பகுதி பல வகையான வன உயிரினங்கள், பறவைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது.
மேலும், இப்பகுதியில் உரிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தினால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அறிக்கை மேல் அறிக்கை
மேலும், நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நன்மங்கலம் காப்புக்காடு வழியாக மெட்ரோ ரயில் தடம் அமைக்க, வனநிலத்தை எடுப்பது குறித்து வனத்துறை பதில் அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஏற்கெனவே மெட்ரோ நிர்வாகம் வனத்துறையிடம் அனுமதி கோரி நகல்களை அனுப்பி இருந்தது. எனினும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் போதிய விளக்கங்கள் இல்லை என்ற காரணத்தால் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு மீண்டும் விளக்கம் கேட்டது. பிறகு, மெட்ரோ ரயில் மற்றொரு அறிக்கையை வனத்துறையிடம் அளித்தது.
அனுமதி மறுப்பு
அதில், மெட்ரோ நிர்வாகம் 320 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட நன்மங்கலம் வனப்பகுதியில் 1.5 ஹெக்டர் அளவு நிலம் மட்டுமே தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதற்கு வனத்துறைக்கு மேலும் சில தகவல்கள் தர வேண்டும் எனவும் கூறி தற்போது வரை மெட்ரோ ரயில் இரண்டாவது வழி தரத்திற்கான அனுமதி வனத்துறை வழங்கவில்லை.
எனவே வனத்துறை அனுமதி பெற்ற பிறகே மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் அதுவரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: வாகன சந்தையில் புரட்சி ஏற்படுத்துமா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?