உலக எய்ட்ஸ் தினம்:-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான், இந்த தினத்தின் நோக்கமாகும். எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கியக் குறிக்கோளாகும்.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்குப்பதிவு:-
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 150 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.
இன்று புயலாகிறது புரெவி:-
வங்கக் கடலில், நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகி, பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது இன்று காலை புயலாக வலுப்பெறுகிறது. 'புரெவி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையைக் கடந்து, குமரி கடல் பகுதிக்கு நகரும். இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை:-
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று புயலாக மாறுகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய இந்தியன் சூப்பர் லீக் போட்டி:-
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில், மும்பை சிட்டி, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
20 விழுக்காடு தனிஇடஒதுக்கீடு கேட்டு பாமக ஆர்ப்பாட்டம்:-
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் முன் பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.