பொதுமக்களுக்கு பல கட்டுப்பாடுகளையும் சென்னை காவல்துறை விதித்துள்ளது. அதன்படி, வரும் 31ஆம் தேதி இரவு புத்தாண்டு பிறப்பதையொட்டி சென்னையில் பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும், மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள கடற்கரைகளில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் மெரினா கடற்கரை சாலை, போர் நினைவு சின்னம் சாலை முதல் காந்தி சிலை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நட்சத்திர ஓட்டல்களிலும், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், ரிசார்ட்களிலும், பண்ணை வீடுகளிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர்.
ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுவதாகவும், கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் வரக்கூடிய பொதுமக்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொள்கின்றனரா என நிர்வாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பைக் சாகசங்கள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களை கண்காணிக்க வாகன சோதனை சாவடிகள் அமைத்தும், ரோந்து பணியிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: TMB முன்னாள் தலைவரின் ரூ.293.91 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி