சென்னை: வருவாய் மாவட்டங்களுக்கு ஏற்ப காவல் நிலையங்களைப் பிரிக்கவும், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தாம்பரம், ஆவடி ஆகிய இரு புதிய காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் கீழ் காவல் மாவட்டங்கள் இல்லாத சூழல் நிலவி வந்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் தாம்பரம் பள்ளிக்கரணை மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய 3 காவல் மாவட்டங்களையும் சேலையூர், தாழம்பூர், கேளம்பாக்கம், மணிமங்கலம், மறைமலைநகர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 6 காவல் சரகங்களையும் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதிய காவல் ஆணையரகங்களுக்குக் கீழ் செயல்படும் காவல் மாவட்டங்களையும், காவல் நிலையங்களையும் பிரித்து அமைக்கத் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு ரவி ஐ.பி.எஸ் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் ஆகியோர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 3 காவல் மாவட்டங்களையும், 6 காவல் சரகங்களையும் அமைக்கத் திட்டம் வகுத்துச் சிறப்பு அலுவலர்கள் மூலம் உள்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இணை ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார்
அந்த பரிந்துரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அலுவலரின் தலைமையில் செயல்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் 3 காவல் மாவட்டங்களுக்கும் 3 துணை ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கக் காவல் ஆணையருக்கு உதவியாக இணை ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒரு இணை ஆணையர் மற்றும் 2 துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரு காவல் ஆணையரகங்களும் வரும் ஜன.1 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரு காவல் ஆணையரகங்களின் செயல்பாட்டைத் தொடங்கி வைப்பார் எனவும், காவல்துறை வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மரங்களை வெட்ட இடைக்காலத் தடை