புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படும் என்பதால் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்த பின்பே முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், உயர்கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆலோசனை செய்துவருகின்றனர்.
இதனிடையே, புதிய கல்வி கொள்கையின் நன்மை, தீமைகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை (ஆகஸ்ட் 03) ஆலோசனை நடத்துகிறார். அதையைடுத்து புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.