சென்னை: இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம், ரூ.2600 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி 2021-22ஆம் ஆண்டிற்கான இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ. 15 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் இயங்கி வருகின்றன. 4 கூடுதல் ஆணையர்கள், 35 இணை ஆணையர்கள், 30 துணை ஆணையர்கள், 77 உதவி ஆணையர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஆகிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களை கொண்டு திருக்கோயில் நிர்வாகம் நிர்வகிக்கப்படுகிறது. தலைமையிட அலுவலக இடப்பற்றாக்குறையைக் களைவதற்காக ஆணையர் அலுவலக வளாகம் விரிவுப்படுத்தப்படுகிறது.
புதியதாக அமையவுள்ள கூடுதல் கட்டடம் 39,913 சதுர அடியில் 4 தளங்களுடன் அமையவுள்ளது. மேலும் முதற்கட்டமாக 425 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் அர்ச்சகர்கள், பட்டச்சாரியார்கள், பூசாரிகள் ஆகிய 12 பேருக்கும், 14 இதர பணியாளர்களுக்கும், கருணை அடிப்படையில் 6 பேருக்கும் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கும், என மொத்தம் 33 பேருக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதையும் படிங்க:அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் - நிதியமைச்சர் பிடிஆர்