மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத என்.ஆர்.ஐ. இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டுக்கு கொடுக்காமல் கவுன்சிலிங் மூலம் நிரப்பக்கோரி தீரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், அரசு அலுவலர்களின் துணையில்லாமல் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் எண்ணிக்கை விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டன. தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான முறைகேடுகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில்தான் நடைபெறுகிறது.
- இதனை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
- தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட காரணம் என்ன?
- ராமநாதபுரம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்?
- நீட் முறைகேடு தொடர்பாக மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
- அரசு அலுவலர்களை சரியாக கண்காணிக்காத நிலையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது சரியா?
என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். மேலும், மாணவர்கள் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்க மாணவர்களின் முகங்களை அடையாளம் காணும் வகையில் கருவிகள் பொறுத்த வேண்டும். மாணவர்களின் சேர்க்கையில் மோசடியை தவிர்க்க ஒருங்கிணைந்த குழுவை அமைத்து கண்காணிக்க மத்திய மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரம், முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள், இரண்டாம், மூன்றாம் முறை முயற்சி செய்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், நீட் முறைகேடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: