சென்னை மீனம்பாக்கம் என்ஜிஓ காலனி, நேவி கோட்டரஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருபவர் போஸ் (47). இவர் இந்தியக் கடற்படையில் பணிபுரிந்துவருகிறார்.
மடிக்கணினி, மதுபாட்டில்கள் திருட்டு
இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதி வீட்டில் அனைவரும் தூங்கி அடுத்த நாள் காலையில் எழுந்து பார்க்கும்போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த மடிக்கணினி, மதுபாட்டில்கள் திருடுபோயிருப்பதைக் கண்ட குடும்பத்தினர், இது குறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, திரிசூலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) எனத் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரைத் தேடிவந்த நிலையில், அவர் திரிசூலம் மலையில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
மாத்திரைகள் திருடிய வழக்கு
தகவலின் அடிப்படையில் அங்கு சென்று கார்த்திக்கை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்லாவரத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் திருடிய வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்ததும், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிபதி முன் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு இருக்கக்கூடிய நேவி கோட்டரஸில் புகுந்து திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றியது அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.