தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராசிரியர் அருணன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ”எந்த வகையில் பார்த்தாலும் இலங்கைத் தமிழர்கள் உள்பட அனைவருக்கும் எதிரானவைதான் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவை. இவை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும். பாகிஸ்தானிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை உண்டு என்கிறார்கள், ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு இல்லை என்கிறார்கள்.
தேசிய குடிமக்கள் பதிவேற்றச் சட்டத்திற்கு முன்னோட்டம் தான், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு. அசாமில் மட்டும் என்.ஆர்.சி யால் 19 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். இந்தியா முழுமையாக அமல்படுத்தினால் என்ன ஆகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். கேரளா, புதுச்சேரி வழியில் தமிழ்நாட்டிலும் இவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றோம்.
ஆனால், அரசு அதற்கு செவி மடுக்கவில்லை. பெற்றோர் பிறந்த தேதிக்கான ஆதாரம், பிறந்த ஊருக்கான ஆதாரம் கேட்டால் என்ன செய்யப் போகிறோம், அதற்கான ஆதாரத்தை நாம் தர முடியவில்லை என்றால் ’டவுட்புல் சிட்டிசன்’ என அதிகாரி குறிப்பிட்டால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுகிறது. எனவே, குறிப்பிட்ட 6 கேள்விகளை என்.பி.ஆரில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என்பதை ஏற்க மறுப்பதால் தான் நாங்கள் போராட்டத்தை வலுப்படுத்துகிறோம்.
நாளை மறுநாள் 26ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் மிக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன“ என்றனர்.
இதையும் படிங்க: 'CAA-விற்கு எதிராகக் கூடிய 50 ஆயிரம் பேர்' - திருச்சியைத் திணறடித்த சிறுத்தைகள்