நிலக்கரி இறக்குமதிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவையில்லை என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இந்த வழக்கானது நாடு முழுவதிற்கும் பொதுவானது என்றுக் கூறி, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி இருவரும் இன்று(ஜூலை.9), "தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வுகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும், நாடு முழுவதற்கும் பொருந்தும். டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவு மட்டுமே நாடு முழுவதும் பொருந்தும் என்று கூறிவிட முடியாது.
வழக்கு தொடர்வதற்காக, டெல்லி வரை சென்று செலவு செய்யக் கூடாது என்பதற்காகவே ஐந்து மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்லி தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவு மட்டுமே நாடு முழுவதற்கும் பொருந்தும் என்னும் நடைமுறையைப் பின்பற்றினால், அது நீதி மறுப்பதற்குச் சமமாகும். மக்களுக்கு நீதி வழங்கவே தாலுகா அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
அத்துடன் குறிப்பிட்ட நீதிபதிகளின், தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டு, விசாரணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் குழு: பிரதிநிதித்துவம் வெளிப்படையாக இருக்க உத்தரவு