புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை உள்பட மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் 10 லட்சத்து நான்காயிரத்து 507 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 635 இடங்களில் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்காக ஆயிரத்து 677 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஆயிரத்து 558 விவிபேட் இயந்திரங்களும், ஆயிரத்து 558 கன்ட்ரோல் யூனிட் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் பணியில் ஆறாயிரத்து 835 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்துவருகின்றனர். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள கர்தினால் லூர்துசாமி அரசுப் பெண்கள் பள்ளிக்கு தனது மகளுடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் மத்திய அரசு கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
பாஜக அதிகார பலத்தையும், பண பலத்தையும் வைத்து தேர்தலைச் சந்தித்துள்ளது. புதுச்சேரியில் காலூன்ற பாஜக வேலை செய்துவருகிறது. பாஜகவின் அடக்குமுறைக்கும் மிரட்டல்களுக்கும் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள்.
கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் அளித்த ஆதரவை இந்தத் தேர்தலில் அளித்து தொடர்ந்து வெற்றி பெறவைப்பார்கள். மதக்கலவரம் சாதிக்கலவரம் உருவாக்கும் நோக்கில் உள்ள பாஜக கூட்டணியை புதுச்சேரி மக்கள் புறக்கணித்து காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறச் செய்வார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரள தேர்தல்: பினராயி விஜயன் வாக்கு செலுத்தினார்