முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
தமிழக அரசு பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, “தமிழக அரசு தரப்பில் ஆளுனரின் அதிகாரத்தை கேள்வி எழுப்ப முடியாது. பரிந்துரை செய்வதுடன் அரசின் கடமை முடிந்தது. விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. எனவே நளினியின் சிறை சட்டவிரோத காவல் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில், மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே நளினியின் காவல் சட்டவிரோத காவல் இல்லை. விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்துவிட்டோம். நாங்கள் ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானத்துக்கு மதிப்பில்லை. அதனால் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தண்டிக்கப்பட்டு சிறையில் இருப்பதால், நளினி சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக கூற முடியாது.
தண்டனை குறைப்பு தொடர்பாக அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் கையெழுத்திட வேண்டியது கட்டாயமாகும். ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. ஆகவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் கூறி நளினியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: எங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுங்கள்' - டிஜிபிக்கு நளினி மனு