சென்னை: ராஜிவ் காந்தி வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இதன்மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களும், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கு நாளை (மார்ச் 09) விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரின் மனுக்கள் மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை