சென்னை: தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவரான முத்து ரமேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " பொதுமேடையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை குறித்து திமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத் ஒருமையில் அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போராட்டம் வெடிக்கும்: அதேபோல, ஆளுநர் பதவி தேவையில்லை, ஆளுநரை மதிக்கமாட்டோம் என அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் பேசி வருகிறார். எனவே அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதேபோன்று, பிரதமர் மோடி, முன்னாள் ஆளுநர் கிரண்பேடி உட்பட பல தலைவர்களை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசி வருகிறார்.
நாஞ்சில் சம்பத் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாடார் அமைப்பினர் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். மேலும், நாஞ்சில் சம்பத் வீடு மற்றும் காவல் துறை அலுவலகம் முற்றுகையிடப்படும்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி திமுக விழாவில் மாயமான தமிழச்சி தங்கப்பாண்டியனின் செல்போன்