திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் நா.முத்துக்குமாரின் அனைத்து படைப்புகளையும் ஒன்றாக தொகுத்து, அதனை பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை டிஸ்கவரி புக் பேலஸ் முன்னெடுத்துள்ளது. அதன் அறிமுக விழா சென்னையில் இன்று (டிச.25) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், அஜயன் பாலா, வழக்குரைஞர் சுமதி, நா.முத்துக்குமாரின் மனைவி ஜீவா, மகன் ஆதவன், டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். நா.முத்துக்குமாரின் புத்தகங்களின் பதிப்புரிமைக்கான காசோலை, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் சார்பில் நா.முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழாவில் தனது அப்பா குறித்து ஆதவன் நா.முத்துக்குமார் வாசித்த கவிதை அனைவரையும் நெகிழ வைத்தது.
அப்போது பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், “ நா.முத்துக்குமார் ஆரம்பகாலம் முதலே எனது சிறந்த நண்பர். அவர் விட்டுச்சென்ற கடமைகளை கனவுகளை அவரது மகன் ஆதவன் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன், கவிதைகள், நியூட்டனின் மூன்றாம் விதி உள்ளிட்ட 11 நூல்களுக்கான பதிப்புரிமையை டிஸ்கவரி புக் பேலஸ் பெற்றுள்ளது. அனைத்து நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் விற்பனைக்கு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரஜினி விரைவில் குணமடைய விரும்புவதாக பவர்ஸ்டார் அறிக்கை