திருவொற்றியூர் சுங்கச் சாவடி அருகில் நடந்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக கட்சிகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையில் தேசியக் கொடிகளை ஏந்தியும், போராட்டம் நிறைவுபெறும்போது தேசிய கீதம் பாடியும் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அப்துல் காதர், “ இந்தியா எங்கள் தாய்நாடு. நாங்கள் எங்கள் உயிரை விட அதிகமாக இந்நாட்டை மதிக்கிறோம். அந்தத் தாய்நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதை அமல்படுத்தியும் இருக்கிறது பாஜக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமானால், அது இந்தியாவில் வாழுகின்ற 25 கோடி இஸ்லாமியர்களின் உயிர் போன பிறகுதான் முடியும் “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக தடுத்திருக்க முடியும்’ - கனிமொழி