சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கடந்த பிப்ரவரி 28ஆம் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை சார்பில் சம்மன் பறந்துள்ளது. அதில், நீங்கள் சேவை வரியை கட்டாத காரணத்தால், வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ், சென்னை மண்டல அலுவலகத்தில் மார்ச் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும்.
சென்ட்ரல் எக்சைஸ் சட்டம் 1944 பிரிவு 14, பைனான்ஸ் ஆக்ட் 1994 பிரிவு 83, ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவுகள் 70, 174 ( 2) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் இளையராஜா ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மார்ச் 21ஆம் தேதி மற்றொரு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதிலும் மேற்கூறிய காரணங்களை குறிப்பிட்டு மார்ச் 28ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முறையும் இளையராஜா விளக்கம் அளித்தாரா, இல்லையா என்பது குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்தின் முன்னுரையை இளையராஜா வைத்து எழுதப்பட்டது. அந்த முன்னுரையில், "முஸ்லிம் பெண்களின் நலனுக்காக முத்தலாக் தடை சட்டம் கொண்டுவந்து பிரதமர் மோடி பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார்.
அவருக்கும் அம்பேத்கருக்கும் பல விதங்களில் ஒற்றுமை இருக்கிறது. குறிப்பாக இருவருமே ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மிகப்பெரும் உயரத்திற்கு சென்றவர்கள். சுதந்திர இந்தியாவை பற்றிய மிகப்பெரும் கனவை கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேபோல இளையராஜாவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: படித்த மேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிடுவது நல்லது அல்ல - கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!