சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஷ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.
சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, முனீஷ்வர் நாத் பண்டாரி பொறுப்பேற்கும்வரை (New Acting CJ Munishwar Nath Bhandari) மூத்த நீதிபதி துரைசாமி, பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருப்பார் எனவும், பண்டாரி பொறுப்பேற்ற பின், அவர் பொறுப்புத் தலைமை நீதிபதியாகத் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பண்டாரி, இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆர்.என். ரவி, பதவிப்பிரமாணமும் தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிய நீதிபதியாக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
முனீஷ்வர் நாத் பண்டாரி:
அலகாபாத் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, 1960 செப்டம்பர் 13ஆம் ராஜஸ்தானில் பிறந்தவர். ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித் துறையின் வழக்கறிஞராகவும், உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
2007 ஜூலை 5 அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற இவர், 2019ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவிவகித்துள்ள முனீஷ்வர் நாத் பண்டாரி 2022 செப்டம்பர் 12 அன்று ஓய்வுபெறுகிறார்.
இதையும் படிங்க: மீண்டும் மாநாடுக்கு சிக்கல் - சிம்புவைப் பழிவாங்கும் உதயநிதி?