பீமா கோரேகான் வழக்கு, ஊபா சட்டம், தேசிய புலனாய்வு முகமையின் சட்டத்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உள்ளிட்ட மனித உரிமை காப்பாளர்கள், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து கொடுங்கோன்மை சட்டங்களுக்கு எதிரான இயக்கம், சென்னையில் இன்று (நவம்பர் 18) பரப்புரை போராட்டம் நடத்தியது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "2010ஆம் ஆண்டு ஊபா சட்டம், தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் மத்திய அரசால் திருத்தப்பட்டது. ஊபா சட்டம் மூலம் ஒரு இயக்கம் மட்டுமல்லாமல் தனிநபர் கூட பயங்கரவாதி என கருதலாம். தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் மூலம் ஒரு மாநில காவல் ஆணையர் அனுமதி இல்லாமல் மத்திய அரசு நேரடியாக ஒருவரை விசாரணை மற்றும் கைது செய்யலாம்.
மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பல்வேறு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே, இந்த இரண்டு சட்டங்களையும் மீண்டும் திருத்தப்பட வேண்டும். இதை கண்டித்து 10 இடங்களில் கொடுங்கோன்மைக்கு எதிரான சட்ட இயக்கம் பரப்புரை போராட்டத்தை நடத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.