அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டது.
அதையடுத்து விசாரணை ஆணையம், "சூரப்பா மீதான விசாரணை அலுவலர்களுக்கான அலுவலகம், சென்னை பொதிகை வளாகம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் மீது புகார் கொடுக்க விரும்புபவர்கள் நவ. 25ஆம் தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் மேற்கூறிய அலுவலகத்தில் அளிக்கலாம்" என அறிவிப்பு வெளியிட்டது.
அதனடிப்படையில் இன்று (நவ. 30) விசாரணைக் குழு, "சூரப்பா மீது இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு ஆதரவாகவும் கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.
அது குறித்து ஆய்வு செய்துபின் புகார் அளித்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் வரும் டிச. 9ஆம் தேதி வரை புகார் மனுக்களை அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான அரசாணையை ரத்த செய்ய கோரி மனு...!