சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "காலை முதல் 50 ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 3 கோடியே 54 லட்சத்து 19 ஆயிரத்து 980 பேர், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். 31 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவும், 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவும் தகுதியானவர்கள். தகுதியுள்ள 4 கோடியே 21 லட்சம் பேர், இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். சென்னையில் 98 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தயக்கம் இன்னும் இருக்கிறது. பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வகை கரோனா வைரஸ் பரவி வருவதால், மக்கள் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குரங்கு அம்மை பரவல் குறித்து அதிக கவனம் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 63 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழக விமான நிலையங்கள் மற்றும் கேரளா எல்லையில் 13 இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுப்பது தொடர்பான புகாரில் அந்த மருத்துவமனையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்த மருத்துவமனை முறையிட்டதில், மருத்துவமனை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
செஸ் ஒலிம்பியாட போட்டிகளில் கரோனா பரவாமல் தடுக்க 344 பேர் சுகாதாரத்துறை சார்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு வரும் வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும், அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளிலும், விளையாட்டு திடலிலும் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் குரங்கம்மை: பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு