சீனாவில் வூஹான் எனும் சிறிய மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலக நாடுகளையே ஆட்டம் காணச் செய்கிறது. கரோனாவின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் விழிபிதுங்கி போயுள்ளன. இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போதோ இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி மக்களைத் தனிமைப்படுத்துவதே என்று உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதற்கு முன்பாகவே, பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்தையும் மூடவும், 144 உத்தரவையும் பிறப்பித்தன.
சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே கரோனாவிலிருந்து முழுமையாக விடுபட முடியும். இதனை உணர்ந்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைத் தனிமைப்படுத்தி, கரோனா பாதிப்பை பெருமளவு குறைத்துள்ளது. இதனைக் கடைப்பிடிக்காத இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொத்துகொத்தாக மக்கள் இறந்துவருகிறார்கள். இந்த இரு செயல்முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தனிமைப்படுத்தலின் அதிமுக்கியத்துவத்தை உணர வேண்டும்.
சீனாவை உதாரணமாகக் கொண்டு களமிறங்கியுள்ள இந்திய அரசு ஊரடங்கைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த நடவடிக்கை தொடர்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு தீவிரச் சோதனையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில காவலர்கள் மக்களிடம் கனிவாக எடுத்துக் கூறியும், அறிவுரை கூறியும் வீட்டிலிருக்க வலியுறுத்துகின்றனர்.
மேலும் சிலர் தேவையில்லாமல் வெளியில் நடமாட, அவர்களுக்கு காவல் துறையினர் சில சட்டத்திற்கு புறம்பான தண்டனைகளை வழங்கி வருவது அன்றாடம் அரங்கேறுகிறது. ஒரு நாகரிகமடைந்த சமூகம் நிலைமையின் தீவிரத்தைக் கண்டுகொள்ளமால் வெளியில் சுற்றி இதுபோன்ற தண்டனைகளைப் பெறுவது உவப்பானதா?
நேற்று (மார்ச் 26) தேசிய ஊரடங்கின் முதல் நாள் என்பதால் காவலர்களின் நடவடிக்கை சாதாரணமாக இருந்ததாகவும் நாள்கள் போக போக நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்குமெனவும் எச்சரித்துள்ளார் அமைச்சர் கே. பாண்டியராஜன். இதனையே மற்ற அமைச்சர்களும் வழிமொழிகின்றனர். அனைவரும் கட்டுக்கோப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்பதே அரசின் ஒற்றை நோக்கமாகவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
காவல் துறையினரால் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் கண்காணிப்பது கடினம் என்பதால், இன்று ட்ரோன் கேமராக்களை தலைநகர் சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு மாவட்டங்களில் களமிறக்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலைகள், காவல் துறையினரால் செல்ல முடியாத இடங்கள், இரு மாநிலங்களின் எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு, அடாவடித்தனாமாக வெளியில் சுற்றும் நபர்களைக் கண்காணிக்கவுள்ளனர் காவல் துறையினர்.
சமூகப் பரவல் என்பது அண்டை மாநிலங்களில் உள்ள நபர்களாலும் ஏற்படக் கூடும் என்பதால், தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்கப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திர எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு - கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி, தமிழ்நாடு - கர்நாடகா மாநில எல்லைகளான ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த முறையைச் செயல்படுத்தவுள்ளனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் எனவும், வெளியில் வருபவர்களை எளிதாக அடையாளம் கண்டு விரைவில் நடவடிக்கை எடுத்து மற்றவர்கள் இதுபோன்ற தவறிழைக்காமல் கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் காவல் துறையினர்.
ட்ரோன்களின் கழுகுப் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று அடித்துக் கூறும் அவர்கள், இதற்குப் பயந்து மக்கள் வெளியிலேயே வரமாட்டார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி அநாவசியமாக வெளியே நடமாடினால் அவர்கள் மீது கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படும்.
குமரியில் நேற்று ஒரு நாளில் மட்டும் தேவையின்றி வெளியே சுற்றிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் இருசக்கர வாகனம் அல்லது கார்களில் சாலைகளில் உலா வருகின்றனர். அவர்களின் வாகனங்கள் கண்டிப்பாகப் பறிமுதல் செய்யப்படும். அதேபோல எவ்வளவு அறிவுரை கூறியும் டீக்கடைகள், பரோட்டா கடைகள் திறந்து வைத்துள்ளனர். இவ்வாறு செயல்படும் கடைகளை நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன் சீல் வைக்க முடிவு செய்துள்ளோம்.
இது எல்லாம் பொதுமக்களின் நலனுக்காகத் தான் நாங்கள் செய்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் அவர்களைக் கட்டாயப்படுத்துவதை விட அவர்களே நிலைமை உணர்ந்து வீட்டை விட்டு வெளியே வராமல் அமைதி காக்க வேண்டும்.
குமரியில் வெளிநாடுகளிலிருந்து வந்த 3,600 பேர் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமல்ல அவர்கள் வீட்டு உறுப்பினர்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. காவல் துறையினர் அவர்களைக் கண்காணித்து வருகின்றனர். எனினும் சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து பொதுமக்களுடன் கலந்து சுற்றுவதாக அறிகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும்.
இன்று முதல் மாவட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குமரி மாவட்டத்தின் மிக முக்கிய இடங்கள் கண்காணிக்கப்படும். கடற்கரைக் கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாது என்ற சட்டம் மீறப்படுவதாகத் தெரிகிறது. எனவே கடற்கரை பகுதிகளான முட்டம், சின்னமுட்டம், தேங்காய்பட்டணம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
அடுத்தக் கட்டமாக குமரி, கேரள எல்லைப் பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படவுள்ளன. இதன் மூலம் அரசின் அறிவுரையை மீறுபவர்கள் எளிதில் அடையாளம் கண்டு அவர்கள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்” என்றார்.
இதேபோல் சென்னையில் மக்களைக் கண்காணிக்கவும், மாநகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் ட்ரோன்களை பறக்க விடும் பணியை மாநகர ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
கரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர் என அனைவரின் அயாராத உழைப்புக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, அரசின் அறிவுரைகளை ஏற்று நாம் அனைவரும் வீட்டுக்குள் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்திக் கொண்டால் நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றுவதற்குச் சமம். படங்களில் ஹீரோக்கள் தான் மக்களைக் காப்பாற்ற வருவர். தற்போது நாம் அனைவருமே ஹீரோக்கள் தான். நம்மால் பல உயிர்கள் காப்பாற்றப்படப் போகின்றன. இந்த ஒற்றைச் சிந்தனையில் அனைவரும் இணைந்து கொடூர கரோனாவை கொடூரமாக விரட்டியடிக்க வீட்டிலிருந்தபடியே உறுதிமொழி ஏற்போம்!
ஊரடங்கிற்கு கட்டுப்படுவோம்! கரோனாவை கட்டுப்படுத்துவோம்!